பெங்களூரு: பெங்களூருவில் பெண் ஒருவரை ரேபிடோ ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் நகைக்கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் ‘ரேபிடோ’ என்ற பைக் டாக்ஸி ஆப்பைப் பயன்படுத்தி பயணம் செய்துள்ளார். அப்போது அந்த ஓட்டுநர் மிகவும் வேகமாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதியில் வண்டியை நிறுத்தி அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் முற்றி, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஓட்டுநர் அந்தப் பெண்ணை அறைந்துள்ளார். அறைந்ததில், அந்தப் பெண் அங்கு தரையிலேயே விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
பெண்ணை அந்த ஓட்டுநர் அறைந்தபோது யாரும் தடுக்காதது, வீடியோ பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பெண்ணை புகார் அளிக்க அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர் இந்த விஷயத்தைத் தொடர விரும்பவில்லை எனக் கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், non-cognizable report பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்துப் பேசிய பைக் டாக்ஸி ஓட்டுநர் சுஹாஸ், குறிப்பிட்ட இடத்துக்கு குறுக்கு வழிகளில் சென்று அவரை இறக்கிவிட முயற்சித்தேன். பாதி வழியில் வண்டியை நிறுத்த வலியுறுத்திய அப்பெண், ஆங்கிலத்தில் என்னை கடுமையாகத் திட்டினார். நான் 5 ஆண்டுகளாக பைக் டாக்ஸி ஓட்டுவதாகவும், அனைத்து வழிகளும் தனக்குத் தெரியும் என்பதால் விரைவில் இறங்க வேண்டிய இடத்தை அடைவேன் என்பதை அவருக்கு நான் கூற முயற்சி செய்தேன்.
ஆனால், அதற்குள் அவர் தனது உணவுப் பையை வைத்துத் தாக்கினார். பொதுமக்கள் பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர் இதனைச் செய்ததால், என்னால் பொறுக்க முடியவில்லை. அதற்கு எதிர்வினையாற்றினேன் எனக் குறிப்பிட்டார். பயணத்தின்போது நடந்த இந்த சம்பவம் குறித்து தனது மேலாளரிடம் சுஹாஸ் கூறியுள்ளார். காவல் துறையின் விசாரணைக்கும் ஒத்துழைத்துள்ளார்.
வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் கர்நாடகா மாநிலம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இந்த சம்பம் பெரும் பேசு பொருளாகியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.