பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்குத் தொடங்கிய கனமழை அதிகாலை 5.30 மணி வரை தொடர்ந்தது. இதன் காரணமாக, சிவாஜிநகர், ஹென்னூர், கிருஷ்ணராஜபுரம், கோரமங்கலா உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. சில்க் போர்ட், சாந்தி நகர், யெலஹங்கா உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.
வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. சாந்தி நகரில் உள்ள பிஎம்டிசி பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பேருந்துகளை வெளியே கொண்டு வர முடியவில்லை. பின்னர், தண்ணீர் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றிய பிறகு, பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூருவில், நேற்று முன்தினம் இரவு கெங்கேரியில் அதிகபட்சமாக 132 மி.மீ மழை பதிவாகியுள்ளது. எச்ஏஎல், மாரத்தஹள்ளி, ஹென்னூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கம்மனஹள்ளி, இந்திராநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பெங்களூருவின் ஹோரமாவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மீட்புக் குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டனர்.
வைட்ஃபீல்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், சசிகலா (35) என்ற தனியார் நிறுவன ஊழியர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் சித்தராமையா நேற்று மாலை பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெங்களூரு மக்களுக்கு கர்நாடக அரசு உடனடியாக ரூ. 1,000 கோடி நிதியை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும்” என்றார். பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 48 மணி நேரத்திற்கு பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மிமீ முதல் அதிகபட்சம் 115.5 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.”