உச்சநீதிமன்ற வரலாற்றில் புதிய திருப்பமாக, நியமனமும் பதவி உயர்வுகளிலும் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில், முக்கியமான திருத்தங்களை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில், பட்டியலின, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்த திருத்தம், 1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “சேவை மற்றும் நடத்தை விதிகள்” என்ற சட்டத்தைச் சீரமைப்பதன் மூலம் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சுற்றறிக்கை, உச்சநீதிமன்றத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பதிவாளர் மற்றும் நீதிபதிகளின் உதவியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும் இவ்விதி அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றமான அறிவிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து எந்தவிதமான உறுதி கூறப்படவில்லை. இது, எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் ஒரு பகுதியாகவே இருக்கும் எனக் காணப்படுகிறது. அதேசமயம், இந்த நடவடிக்கை சமூக நியாயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்த திருத்தம், பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் தலைமையில் நிகழ்வது முக்கியத்துவம் பெறுகிறது. நீதித்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்டும் புதிய அத்தியாயமாக இது வரவேற்கப்படுகிறது. இந்திய நீதித்துறை சமூகவிருத்திக்கான அடித்தளத்தை இப்போது அமைத்திருக்கிறது.