மங்களூரு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலையோர பகுதிகள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது.
இடிந்து விழுந்த வீடு
கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தர கன்னடா மாவட்டம் குமட்டாவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கண்டவள்ளி கிராமத்தில் சிவன் முக்தி என்பவரது வீட்டின் மேற்கூரை, சுவர்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும், ஹொன்னாவர், கார்வார், அங்கோலாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அங்கோலாவில் உள்ள ஹோசதேவாடா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
படகு மூலம் மீட்பு
கார்வாரில் சந்தியா, கோல் சந்தியா பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்தவர்கள் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், எட்டு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார்.
குடகு மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் இருட்டில் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காவிரி ஆற்றில் வெள்ளம்
இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மடிகேரியில் இருந்து காளிபீடு கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து 6 கார்கள் சேதமடைந்தன. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியை சுத்தம் செய்தனர்.
காவிரியின் பிறப்பிடமான தளிகாவிரி, பாகமண்டலா மற்றும் நாபோகுலு பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. இதேபோல் மடிகேரி, பெட்டிகேரி, சம்பாஜே, சுண்டிகொப்பா, குஷால்நகர், சோமவார்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடும் குளிரின் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
குடகில் மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். மானாவாரி பகுதிகளில் வசிக்கும் மக்கள் இம்முறை மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு
தொடர் மழையால், சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை அடுத்த ஆதேபியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி, மைசூர் மற்றும் கேஆர்எஸ், மண்டியா அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், எதிர்பார்த்த அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மண்டியாவின் மல்வள்ளியில் உள்ள ககனசுக்கி, பரசுக்கி ஆறு நிரம்பி வழிகின்றன. இந்த அழகிய காட்சி பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
விடுமுறை அறிவிப்பு
இதேபோல், தட்சிண கன்னடா, மங்களூரு, குக்கே சுப்ரமணியா, பெல்தங்கடி, பந்த்வால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், நேத்ராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.