புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநில மதுபான ஊழல் வழக்கில், மாநில கலால் துறையின் சிறப்பு செயலாளரும், மாநில சந்தை கூட்டுறவு கழகத்தின் இயக்குனருமான அருண்குமார் திரிபாதியை, அமலாக்கத்துறை, ஆகஸ்ட் 8, 2024 அன்று கைது செய்தது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரிபாதி மீதான புகாரில் நியாயம் இருப்பதாக நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் திரிபாதி மீது வழக்குப்பதிவு செய்ய முன் அனுமதி பெறவில்லை என்று கூறிய சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற உத்தரவை கடந்த 7-ம் தேதி ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”திரிபாதி மீதான புகார் அடிப்படை ஆதாரமற்றது என உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்? பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) நோக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைப்பது அல்ல. வரதட்சணை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல் பிஎம்எல்ஏவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே திரிபாதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அப்படிச் சொன்னார்கள்.