புதுடெல்லி: டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அபயா எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, தலைநகர் டெல்லியில் கடும் காற்று மாசு இருப்பதாகவும், அதனால் டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தடுப்பது, அரசுக்கு சொந்தமான கட்டுமான இடங்களில் நிறுத்துவது போன்ற நான்காம் கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த உத்தரவில், “உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி டெல்லிக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில், எங்களது உத்தரவை சரியாக பின்பற்றத் தவறிய டெல்லி அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், குறிப்பிடப்பட்டுள்ள 13 நுழைவுப் புள்ளிகளின் சிசிடிவி காட்சிகளை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இதை கண்காணிக்க 13 வழக்கறிஞர்களையும் நியமித்து உள்ளோம். நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.