திருவனந்தபுரம்: கேரளாவில் சுட்டெரிக்கும் வெயிலை அடுத்து, வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 முதல் 3 மணி வரை ஓய்வு அளிக்க கேரள தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கோடை காலம் தொடங்கும் நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது சராசரியை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
அதன்படி, கட்டுமானத் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களை மே 10ம் தேதி வரை பணி நேரத்தை மாற்ற கேரள தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. பகலில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்.
ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 மணிக்கு முடிவடைந்து 3 மணிக்கு தொடங்கும் வகையில் பணி நேரத்தை மாற்ற வேண்டும். கேரள தொழிலாளர் ஆணையர் சப்னா நசருதீன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில், சூரியன் அதிகம் இல்லாத இடங்களில் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தத் தேவையில்லை என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.