டெல்லி: வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதிக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினறர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் ரூபாய் நோட்டு கட்டுகள் சிதறி கிடந்தன. தீப்பிடிக்காத பெரிய பெரிய பெட்டிகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த அறைக்குள் பெட்டிகளில் கட்டு கட்டாக ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதுபற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது என்னுடைய பணம் அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்தார். மேலும் பணம் கண்டெடுக்கப்பட்ட அறை தன்னுடைய வீட்டின் ஒரு பகுதி இல்லை என்றும் அவர் எழுத்து மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
நீதிபதிகள் குழு என்றாலும் இந்த விவகாரத்தில் உண்மை கண்டறிய 4 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணை முடிவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா பயன்படுத்தும் செல்போனை ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் வீட்டில் தீப்பிடித்த தினத்தன்று அவர் யார்-யாருடன் பேசி இருக்கிறார் என்பதை கண்டறிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதுவரை செல்போன் தகவல்கள் எதையும் நீதிபதி யஷ்வந்த் வர்மா அழிக்கவோ அல்லது யாருக்கும் அனுப்பவோ கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும்வரை பணியாற்றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.