மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 46 வயது மருத்துவர் மற்றும் அவரது மகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜிகா வைரஸ் நோய் என்பது ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும்.
பகலில் மனிதர்களை கடிக்கும் இந்த வகை கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்பும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிகா வைரஸ் முதன்முதலில் 1947-ல் உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 46 வயது மருத்துவர் ஒருவருக்கும் அவரது டீனேஜ் மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புனே மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காய்ச்சல், தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகளால் மருத்துவர் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை அவரது ரத்த மாதிரியை தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியது. மருத்துவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. டாக்டரின் 15 வயது மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
புனே நகரில் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி சுகாதார துறை மூலம் கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவர் வசிக்கும் பகுதியில் வேறு யாருக்கும் தொற்று அறிகுறிகள் இல்லை.
இருப்பினும் கொசுக்கள் பெருகாமல் இருக்க அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “இந்த வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பிட்ட பகுதிகளில் கர்ப்பிணிகளின் உடல்நிலையை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
ஜிகா வைரஸ் பொதுவாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டால், அது வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்” என்றார்.