சென்னை: மக்காச்சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன.
மக்காச் சோளத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இரும்பு புதிய இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்கிறது. மேலும் சோர்வு, பலவீனம், தலைசுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற இரத்த சோகையின் அறிகுறிகளைத் தவிர்க்க உதவுகிறது.
சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் நீங்கி பளபளப்பான முக தோற்றத்தை தருகிறது.
சோளத்தில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ உற்பத்தியை தூண்டுகிறது. வைட்டமின் ஏ கண்பார்வை மற்றும் சரும ஆரோக்கித்திற்கு மிகவும் நல்லதாகும். மக்காச்சோளத்தில் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை இயல்பாக பராமரிக்க உதவுகிறது.
மேலும் சோளத்தில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது. சோளத்தில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. நல்ல பாக்டீரியாக்கள் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை தடுப்பதில் முக்கியமானவை.
தோல் அலர்ஜி சம்பந்தமான கோளாறு உடையவர்களுக்கு சோளம் அலர்ஜி ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப் படுகிறது. எனவே, தோல் அலர்ஜி உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.