இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றான எலுமிச்சை ஜூஸு, உடலை குளிர்விக்கவும், நீரேற்றம் செய்யவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. பலரும் இதனை வெவ்வேறு வழிகளில் தயாரிக்கின்றனர். ஆனால் இதனை எந்த பாத்திரத்தில் தயார் செய்கிறோம் என்பதும் அதே அளவுக்கு முக்கியம். குறிப்பாக, செம்புப் பாத்திரத்தில் எலுமிச்சை ஜூஸை தயாரிப்பது அல்லது அதில் ஊற்றி வைப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு அபாயகரமான பழக்கமாக இருக்கலாம்.
செம்பு, ஆயுர்வேதத்தில் ஒரு மருத்துவப் பொருளாக கருதப்படும் உலோகமாக இருந்தாலும், அது அமிலத் திரவங்களுடன் வினைபுரியும் தன்மை கொண்டது. எலுமிச்சை ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம், செம்புடன் சேரும் போது காப்பர் சிட்ரேட் போன்ற நச்சுத் தன்மை கொண்ட உப்புகளை உருவாக்குகிறது. இந்தக் கலவைகள் பானத்தில் கரைந்து அதனை நச்சாக்கலாம். இதனை தொடர்ந்து உட்கொள்ளும் போது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான சிக்கல்களை உருவாக்கும்.

தாமிரம் ஒரு அத்தியாவசியத் தாதுவாக இருந்தாலும் கூட அது தேவைக்கு மீறி உடலில் சேரும்போது நச்சுத் தன்மையை உருவாக்கும். நீண்ட நேரம் செம்பில் வைத்த எலுமிச்சை நீரை குடிப்பது தாமிரப் பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும். சுவையும், உணவின் பாதுகாப்பும் பாதிக்கப்படுவதுடன், காலப்போக்கில் இது பல்வேறு உடல்நலக்கேடுகளுக்கும் காரணமாகும். எனவே, இந்த பானத்தை எந்தப் பாத்திரத்தில் தயாரிக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய, எலுமிச்சை ஜூஸு தயாரிக்க கண்ணாடி, துருப்பிடிக்காத எஃகு அல்லது மண் பானைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. இந்தப் பொருட்கள் எதுவும் இரசாயன எதிர்வினையை ஏற்படுத்தாது என்பதுடன், சுவையும், ஊட்டச்சத்துக்களும் பாதுகாக்கப்படுகின்றன. தவறான பாத்திர தேர்வு ஒரு ஆரோக்கியமான பானத்தை கூட விஷமாக்கக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.