சென்னை: அனைவருக்குமே கேரட் ஜூஸை தினமும் குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் அந்த கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் குடித்தால், உடல் நலம் மட்டுமின்றி, மன நலமும் மேம்படும்.
உடலின் ஆற்றலை அதிகரிக்க எனர்ஜி பானங்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவைகளால் உடலுக்கு எந்த ஒரு நன்மையும் விளைவதில்லை.
ஆனால் கேரட் மற்றும் இஞ்சியில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. மேலும் இஞ்சி மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு கேரட் மற்றும் இஞ்சி ஜூஸை தினமும் காலையில் குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கேரட் மற்றும் இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சுத்தப்படுத்தும் பண்புகள் இதயத்தின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். அதிலும் கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டின், ஆல்பா-கரோட்டின் மற்றும் லுடீன் போன்றவை மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இஞ்சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதுடன், இரத்த அழுத்தத்தை சீராகவும் வைத்துக் கொள்ளும்.
இந்த ஜூஸ் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். குறிப்பாக கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, இரத்த செல்களுக்கு நல்லது. அதே சமயம் இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். முக்கியமாக இந்த பானம் உடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.