சென்னை: பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும் உணவு… மனித உடலில் உள்ள ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். அவை: ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த சிவப்பு அணுக்கள், ‘பிளேட்லெட்’ எனப்படும் ரத்த தட்டுக்கள். இவற்றுள் ரத்த சிவப்பணுக்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்லும் பணியை செய்யும்.
ரத்த வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்து போராட உதவும். விபத்தாலோ, வேறு ஏதேனும் காரணமாகவோ உடலில் ஏற்படும் காயங்களில் இருந்து வழியும் ரத்தத்தை உறைய வைப்பதற்கு பிளேட்லெட்டுகள் உதவும்.
ஒருவரது உடலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் பிளேட்லெட்டுகள் இருக்கும். ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவாக பிளேட்லெட்டுகள் இருந்தால் ரத்தம் உறைவதில் பிரச்சினை ஏற்படும்.
டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகுவது, ஒருசில மருந்துகள் உட்கொள்வது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கின்றன. பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்தால் பப்பாளி இலையை சாறு எடுத்து பருகும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. வேறு சில காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்களும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மாதுளம் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை பிளேட்லெட் எண்ணிக்கையையும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும். கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளில் வைட்டமின் கே அதிகமாக உள்ளன. ரத்தம் உறைதலுக்கு இவை அவசியமானவை. சாலட்டுகள், ஸ்மூத்திகள் மற்றும் சமையலில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம்.
பூசணிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பிளேட்லெட்டுகள் உற்பத்திக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும். பூசணிக்காயை உணவில் சேர்ப்பதுடன் சூப், சாலட் வடிவிலும் உட்கொள்ளலாம். பீட்ரூட்டில் இரும்பு மற்றும் போலேட் அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் உற்பத்திக்கு இவை உதவும். பீட்ரூட்டை சாலடுகள், ஸ்மூத்திகள், ஜூஸ்களில் கலந்து உட்கொள்ளலாம்.