சென்னை: உடல் எடை என்பது சரியான அளவில் இருக்க வேண்டும். அதாவது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடை இருப்பது முக்கியம். அந்த சராசரி அளவிற்கு மிக அதிகமான உடல் எடை கொண்டிருப்பதும் ஆபத்து தான். அதேபோல மிக குறைவான உடல் எடை கொண்டிருப்பதும் நல்லது கிடையாது. சிலர் மிகவும் ஒல்லியான உடல்வாகு கொண்டிருப்பார்கள் அவர்கள் என்னென்ன உணவுகளைச் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்!
எள்ளு
மிகவும் மெலிதான எடை உள்ளவர்களுக்கு எள்ளு கைகொடுக்கும். இவர்கள் இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் எடை சிறப்பாக அதிகரிக்கும். எள்ளு சட்னி, எள்ளுப்பொடி, எள்ளுருண்டை போன்ற உணவுகளை இதிலிருந்து தயாரிக்க முடியும். எள்ளு ஒரு சுவையான உணவுப் பொருளும் கூட! ‘இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது நம் முன்னோர்களின் வார்த்தை என்பதை மறக்க வேண்டாம்.
சால்மன் மீன்
இந்த மீன்களில் புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. ஆக இதை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த மீன்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.
அவகேடோ பழங்கள்
இந்த பழங்களில் கலோரிகள், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவு காணப்படுகின்றன. மற்ற உணவுகளைப் பொறுத்தவரையில் சமைத்துச் சாப்பிட வேண்டிய சூழல் இருக்கும். ஆனால் இது மாதிரியான பழங்களை எளிதாகச் சாப்பிட முடியும். தினம் ஒரு அவகேடோ பழத்தைச் சாப்பிடுவதன் மூலம், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.
நெய்
நெயில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இதை உணவில் சேர்க்கும் போது உணவின் சுவை அதிக அளவு கூடிவிடும். உதாரணமாகச் சாம்பார், தோசை, பலகாரங்கள் போன்றவற்றில் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நிச்சயம் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.
முட்டை
உடலின் தசை மற்றும் எலும்புகளை உறுதி ஆக்குவதில் முட்டை சிறந்த பங்காற்றும். அதனாலேயே விளையாட்டு வீரர்கள் தினமும் முட்டையைச் சாப்பிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் உடல் எடை குறையாமல் இருக்கும். மேலும் உடல் வலிமையோடு காணப்படும். முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை கருக்கள் என்று இரண்டுமே அதிகளவு சத்துகளைக் கொண்டன. மிகவும் மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு முட்டை சிறந்த உணவு. தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் எடை மேம்படும் என்பது உறுதி.
உலர்ந்த பழங்கள்
உலர்ந்த பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அதே வேளையில் இந்த பழங்கள் உடல் எடையை அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டன. உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் இந்த உலர்ந்த பழங்களைத் தினமும் சாப்பிடலாம். குறிப்பாக உலர்ந்த திராட்சைகள் நல்ல பலன் தரும்.