தோல் புற்றுநோய் என்பது உலகளவில் மிகவும் பரவலாகக் காணப்படும் புற்றுநோயாகும். இது ஆரம்ப நிலையில் கண்டறியப்படும்போது சிகிச்சை பெற ஏற்ற நிலை உருவாகும். ஆனால் பொதுமக்களுக்கு இதன் தொடக்க அறிகுறிகள் குறித்த புரிதல் அதிகம் இல்லை. பொதுவாக, தோலில் மச்சங்கள், தடிப்புகள் தோல் புற்றுநோயை உணர்த்தும் என்று நம்மில் பலர் கருதினாலும், உண்மையில் பல்வேறு மற்ற அறிகுறிகளும் உள்ளன. இவை அனைத்தையும் முன்னதாகவே கவனித்தால், நோயின் தாக்கத்தை குறைத்து, சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

முதலாவதாக, தோலில் ஏற்படும் தொடர்ந்து நீடிக்கும் அரிப்பு, மென்மை, அல்லது எரிச்சல் இல்லாத இடத்தில் தோன்றும் வலிமை போன்றவை கவனிக்கப்பட வேண்டியவை. இது குறிப்பாக பாசல் செல் கார்சினோமா என்ற வகை தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது பளபளப்பாகவும், முத்து போன்ற கட்டியாகவும் தோன்றும்.
நகங்களில், குறிப்பாக விரல் நகத்திற்குள் அல்லது அடிநகத்தின் கீழ் கருப்பு அல்லது பழுப்பு நிறக் கோடுகள் தோன்றினால், அது சப்யூங்குவல் மெலனோமாவாக இருக்கலாம். இது ஒரு அரிதான ஆனால் தீவிரமான புற்றுநோய் வகையாகும்.
திடீரென தோல் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக சிவப்பு, ஊதா அல்லது பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றினால் அவற்றும் கவனிக்கப்பட வேண்டியவை. கபோசியின் சர்கோமா போன்ற அரிய புற்றுநோய்கள் இவ்வாறான மாற்றங்களால் வெளிப்படலாம்.
வழக்கமான சிகிச்சைகளுக்கு பதிலளிக்காத உலர்ந்த, செதில் போன்ற திட்டுகள், ஆக்டினிக் கெரடோசிஸ் எனப்படும் புற்றுநோயின் முன் நிலையை வெளிப்படுத்தக்கூடும். இது முறையான சிகிச்சை இல்லையெனில் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவாக மாறக்கூடும்.
முன்னரே தோலில் இருந்த மச்சங்களில் ஏற்படும் மாற்றங்களும் முக்கியமாகும். அந்த மச்சங்கள் வடிவத்தில், அளவில், நிறத்தில் வேறுபாடுகளைக் காண்பித்தால் அல்லது இரத்தம் வரத் தொடங்கினால், அது மெலனோமாவாக இருக்க வாய்ப்பு உண்டு.
ஒரு புண் அல்லது அல்சர் சில வாரங்களாக நீடித்து குணமடையாமல் இருந்தால், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது முகம், காதுகள், கழுத்து மற்றும் கைகளில் அதிகம் தோன்றும்.
புதிய கட்டிகள், குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தோலில் கண்டுபிடித்தால், அவற்றும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவை இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில், உறுதியான மற்றும் உயர்ந்த கட்டிகளாக இருக்கும்.
சரியாக குணமடையாத வெட்டுகள், சிராய்ப்புகள் அல்லது இரத்தப்போக்கு தொடர்ந்தால், அது பாசல் செல் கார்சினோமாவை அல்லது வேறு தோல் புற்றுநோயை சுட்டிக்காட்டலாம்.
இந்த அறிகுறிகள் தோன்றும்போது அவற்றை அலட்சியமாகப் பாராமல் உடனே ஒரு தோல் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும் தோல் புற்றுநோய் முழுமையாகக் குணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை பெருக்குகிறது.