பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காரணம், அவை உடல்நலத்தை மேம்படுத்துவதோடு, பலவிதமான நோய்களையும் தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. குறிப்பாக, தற்போது கோடை வெயில் தீவிரமடைந்து கொண்டிருக்கும் சூழலில், மக்கள் அதிகளவில் பழங்களையும் பழச்சாறுகளையும் வாங்கி உட்கொள்கின்றனர். இது ஒருபுறம் நலமே, ஆனால் சிலர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு குறிப்பிட்ட பழத்தை தவிர்க்க வேண்டியது மிக அவசியம்.

அந்த பழம் தான் ஸ்டார் ஃப்ரூட். இந்த பழம் நட்சத்திர வடிவத்தில் இருக்கும் மற்றும் அதன் மஞ்சள் நிறம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அது அனைவருக்கும் ஏற்றதல்ல. இந்த பழத்தில் உள்ள “காரம்பாக்சின்” எனப்படும் நியூரோடாக்சின், சிறுநீரக பிரச்சனையுள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
இந்திய நெப்ராலஜி இதழ் (2020) வெளியிட்ட தகவலின்படி, இந்த நியூரோடாக்சின் அதிக அளவில் உட்கொள்ளப்படும்போது, தலைவலி, வாந்தி, பலவீனம், மனக்குழப்பம், பதட்டம், தூக்கமின்மை, வலிப்பு, கோமா மற்றும் மிக மோசமான சூழ்நிலையில் மரணத்திற்கும் காரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக டயாலிசிஸ் செய்பவர்கள் ஸ்டார் பழத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பல நன்மைகள் இருந்தாலும், சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதற்கு முன் தங்களின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
இந்த தகவல் பொதுவான விழிப்புணர்வுக்காக வழங்கப்படுகிறது. உங்கள் உடல்நலம், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் எந்தவிதமான மாற்றங்களையும் மேற்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.