இன்றைய நகர வாழ்க்கை வேகமானது. நாம் பெரும்பாலும் உணவை விரைவாக சாப்பிட வேண்டிய சூழலில் இருக்கிறோம். வேலைக்குச் செல்வதற்கான அவசர நேரங்களில், ஒரு பர்கரை எடுத்துக்கொண்டு சில நிமிடங்களில் முடித்துவிட்டு, அடுத்த பணிக்குத் தயார் ஆகிறோம். இதைத் தொடர்ந்து, உடல் பருமனும் செரிமானக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதற்கான காரணமாக உணவை விரைவாக சாப்பிடுவதைக் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்திய ஜப்பான் ஆய்வு ஒன்று புதிய பார்வையை முன்வைக்கிறது.

ஜப்பானின் ஃபுஜிதா ஹெல்த் யுனிவர்சிட்டியில் நடந்த இந்த ஆய்வில், உணவை எப்படி சாப்பிடுகிறோம் என்பதைவிட, எதை சாப்பிடுகிறோம் என்பதே உணவு வேகத்தையும், அதன் விளைவுகளையும் தீர்மானிக்கிறது என தெரிய வந்தது. 20 முதல் 65 வயதுக்குட்பட்ட 41 பேர் இதில் பங்கேற்றனர். பீட்சா மற்றும் இரண்டு விதமான பென்டோ உணவுகள் சாப்பிடச் செய்யப்பட்டனர். அவர்கள் சாப்பிடும் வேகம், மென்று உண்பது, எடுத்த நேரம் போன்றவைகளை சென்சார் மற்றும் வீடியோவின் மூலம் பதிவு செய்தனர்.
அந்த முடிவுகள் கூறுவதாவது, பீட்சா சாப்பிடும் போது அதனை விரைவாக முடிப்பது எளிது. மெலிதாக கடிக்க வேண்டிய தேவை இல்லாததால், மென்று சாப்பிடும் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. ஆனால் பென்டோவில் காய்கறிகள், சாப்பிடும் முறையை மெதுவாக்குகின்றன. சாப்ஸ்டிக்ஸால் உணவை எடுத்துச் சாப்பிடும் முறை, உணவை மெதுவாக சாப்பிட வைக்கிறது. உணவின் அமைப்பே சாப்பிடும் வேகத்தை நிர்ணயிக்கிறது என்பது இது மூலம் நிரூபிக்கப்படுகிறது.
ஆண்கள் பெண்களைவிட வேகமாக சாப்பிடுவதும், வயதானவர்கள் இளையவர்களைவிட வேகமாக உண்பதும் ஆய்வில் தெரியவந்தது. இது பல் நிலை அல்லது மெலிதான உணவுகள் சாப்பிட முடியாத சூழல் போன்ற காரணங்களால் இருக்கலாம். ஆய்வில், பிஎம்ஐ மற்றும் உணவுக்கெடுத்த நேரம் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பில் இல்லை என்றாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமனைக் கூட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர் ஐசுகா கூறுவது போல, “மக்கள் மெதுவாக சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக, மெதுவாக சாப்பிட வைக்கும் உணவுகளையே பரிந்துரைக்க வேண்டும்” என்பது முக்கியமான புரிதல். உணவின் வடிவம், அதன் சாப்பிடும் முறையை இயற்கையாக மாற்றும். மெதுவாக உண்பது என்பது பழக்க வழக்கமாகவும், உணவின் அமைப்பில் இருந்து இயல்பாக வரும் ஒரு நடைமுறையாகவும் மாற வேண்டும்.