சென்னை: தமிழகத்தில் கிராமநத்தம் காலி மனைகளில் வீடுகள் கட்டி வசித்து வரும் தகுதியான 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை விரைவாகப் பெறும் வகையில், விஏஓ, வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் என 3 அலுவலர் நிலைகளில் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வருவாய்த் துறை சேவைகளைப் பெறும் வகையில் ரூ.1.02 கோடியில் 12 சிறு வட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த நிலவரி வசூல் 1436-ம் பசலி ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 12,466 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 1,263 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.68.63 கோடியில் கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. நில அளவைப் பணிகளை விரைவுபடுத்த ரூ.136.68 கோடியில் டிஜிபிஎஸ் ரோவர்கள் வழங்கப்படுவதுடன், தகுதியான 1,500 பேருக்கு நில அளவைப் பயிற்சி அளித்து உரிமம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வருவாய்த் துறை அலுவலர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம், பேரிடர் கால முன்எச்சரிக்கை மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.
