புதுடெல்லி: தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் டெல்லியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்கள் போலீசாரால் தடுப்புக் காவலில் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. அதேவேளையில், தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.
மாலை 4 மணிக்கு பின்னரே ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் குழு தேர்தல் ஆணையத்தை சந்தித்து மனு அளிக்க விரும்புவதாக தகவல் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சந்திப்பு நடைமுறையின்படி செயல்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
