சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்ததாகவும், அப்போது தன்னை தொடர்புகொண்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தேர்தல் செலவுக்கான தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி வழங்குமாறு கேட்டதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து ரூ.4.50 கோடியை திரட்டி, விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசனிடம் வழங்கியதாகவும், பின்னர் ரூ.50 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீதமுள்ள தொகையை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.
புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, புதுக்கோட்டை டி.எஸ்.பி. நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
