மதுரை: மதுரை ஸ்ட்ராங் ரூமில் 15 நிமிடங்கள் வரை திடீரென செயலிழந்த சிசிடிவிக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமராக்கள், சுமார் 15 நிமிடங்கள் வரை செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்ததும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைந்து சென்று அங்குள்ள பாதுகாவலர்களிடம் விசாரித்தனர். அதில் அறைக்குள் மழைநீர் வடிந்ததாகவும், அதுவே கோளாறுக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், வாக்கு எந்திரங்களும் தரையில் வைக்கப் பட்டிருப்பதால், அவற்றை பாதுகாக்கும்படி தேர்தல் அதிகாரிகளை வேட்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிசிடிவி கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் அதிகாரிகளும் கூறியுள்ளனர். மற்றபடி, எந்தவொரு விதிமீறலும் அங்கு நடைபெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.