சென்னை: வாக்காளர் பட்டியலில் நீக்கிய பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
சென்னை மாவட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பால கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. வாக்களிக்க செல்லும்போது பட்டிலில் பலரது பெயர் இல்லாததால் ஓட்டுபோட முடியவில்லை.
வாக்காளர்களை எளிதில் நீக்கும் நடைமுறை உள்ளது. அப்படி இருக்கக் கூடாது. நீக்குவதற்கு முன்பு பலமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.
சென்னையில் 32 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. யார் யாருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளோம். அந்த பட்டியலை தருவதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கமிஷனர் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அரசை துதிபாட சொன்னால் கவர்னர் எப்படி துதி பாடுவார்?
முதலமைச்சருக்கு முன்பு கருப்பு பிடிக்கும். ஆனால் இப்போது கருப்பு பிடிக்கவில்லை. கருப்பு அவருக்கு வெறுப்பாக இருக்கிறது. காவியை நோக்கி போகிறார். தற்போது மினி எமர்ஜென்சி நடக்கிறது. போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரே வெடித்து சிதறுகிறார்கள்.
நெல்லிக்காய் மூட்டை போல விரைவில் சிதறுவார்கள். அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. சட்ட மன்றத்தில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.