தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் தமிழக அரசின் தோல்வியால் விவசாயிகள் நெல்லை சாலையில் போட்டு பரிதவிக்கின்றனர் என்று வி.கே. சசிகலா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் குறுகிய காலத்தில் 5 முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதனால், நெல் கொள்முதல் பணியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
நெல் கொள்முதலில் லாரிகள் இயக்கம் மிக முக்கியமானது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அந்தந்த பகுதி லாரி உரிமையாளர்களுக்கு பிரித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் நெல் மூட்டைகள் இயக்கம் சரியாக நடைபெற்றது.
ஆனால், தற்போது ஒரு நபருக்கு சொந்தமான 3 நிறுவனங்களிடம் மட்டும் லாரி இயக்கத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஒரே நபரால் இவ்வளவு பெரிய அளவுக்கு நெல்லை இயக்கம் செய்ய முடியவில்லை. ஒரே நபருக்கு ஒப்பந்தம் கொடுத்தது தவறு. இதுபோல, தமிழக அரசின் தோல்வியால், விவசாயிகள் நெல்லை சாலையில் போட்டு பரிதவிக்கின்றனர். இதை அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிச் செல்ல ஆளுங்கட்சியினர் நினைக்கின்றனர். எனவே, மத்திய அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.