சென்னை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு… புதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துவதற்கு கடந்த அ.தி.மு.க. அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசினுடைய உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த நிலையில் புதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் எதிர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், வழக்கை நடத்தும்படி நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது என கூறி வழக்கு வாபஸ் பெறப்பட்டதை ஏற்றுக்கொண்டனர்.
வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் இடையீட்டு மனுதாரரின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லாததால் ஜெயவர்தன் மனுவை முடித்து வைத்தும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.