புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில், பிரசாரத்தின் போது, பா.ஜ., தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, தேர்தல் கமிஷனிடம், காங்கிரஸ் புகார் அளித்தது. இதேபோல் காங்கிரஸ் மீதும் பாஜக புகார் அளித்துள்ளது. இந்த புகார்களுக்கு பதிலளிக்குமாறு பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நேற்று தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது.
நாளை மதியம் 1 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், மக்களவைத் தேர்தலின்போது நட்சத்திரப் பிரச்சாரகர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டங்களில் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதனை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கடிதத்தில் நினைவூட்டப்பட்டுள்ளது.