தஞ்சாவூர்: வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம் செய்வதற்கு தஞ்சை மாவட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைரையின்படி, தீவிர சிறப்பு திருத்தம் பணிகள் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் என். குருசாமி, தஞ்சை மாநகரச் செயலாளர் எம். வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். எஸ்ஐஆர் குறித்து சிபிஎம் நிலைப்பாட்டை மனுவாக தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.
அம்மனுவில் தெரிவித்து இருப்பதாவது: எஸ்ஐஆர் குறித்து தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து விட்டு, பின்னர் தற்பொழுது இந்த முடிவை அமல்படுத்த அரசியல் கட்சிகளை நிர்பந்தப்படுத்துகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தொகுதி மறுசீரமைப்பு, மாநிலங்கள்/ மாவட்டங்கள் பிரிப்பு போன்ற அசாதாரணமான சூழ்நிலை எதுவும் தற்போது இல்லை. தேசிய அளவில், எஸ்ஐஆர்ஐ செய்வதற்கு போதிய அவகாசமும், முன்னறிவிப்பும், கலந்தாலோசிப்பும், தேவை. அது இல்லாமல் அதிரடியாக செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. ஏற்கனவே எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பீகாரில் ஏற்பட்ட பிரச்சனை நம் அனைவருக்கும் தெரியும்.
இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் எஸ்ஐஆர் ஐ அமல்படுத்த தேவையில்லை. தேர்தல் ஆணையம் சுருக்க முறை திருத்தத்தின் மூலம் (Summary Revision) வாக்காளர் சரிபார்ப்பு ஒவ்வொரு ஆண்டும் செய்கிற முறையில், அதையே இந்த முறையும் பின்பற்றலாம்.
பருவ மழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை 30 நாட்களுக்குள் 6 கோடி வாக்காளர்களை எஸ் ஐ ஆர் எந்த முறையில் படிவம் பெற்று வாக்காளர் சேர்ப்பது என்ற முயற்சி நடைமுறை சாத்தியமற்ற விஷயம். இது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கூறுகிறோம்.
தேர்தல் ஆணையம் மேலிருந்து உத்தரவுகளைப் பெற்று தன்னிச்சையாக அதன் முடிவுகளை அமல்படுத்துகிற இந்த சூழலில், ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற முறையிலும் இங்கே இருக்கக்கூடிய அனைத்து கட்சி அபிப்பிராயத்தின் அடிப்படையிலும், நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பை மறுத்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அம்மனு தெரிவிக்கப்பட்டது