பெங்களூரு: 2023 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பஜ்ரங் தள நிர்வாகி பரமேஷா பெங்களூருவில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் 42-வது கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு முறை சம்மன் அனுப்பியும் உதயநிதி ஆஜராகவில்லை என்றும், ஜூன் 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜரானார். வழக்கறிஞர்கள் வில்சன், பாலாஜி சிங் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி நீதிபதி சிவகுமாரிடம் மனு தாக்கல் செய்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரூ.1 லட்சம் உத்தரவாதத்துடன் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக பாலாஜி சிங் உதயநிதியை வழக்கறிஞர்கள் அறைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் உட்கார வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் பரமேஷா, “அமைச்சராக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி வழக்கறிஞர் அறையில் உட்கார முடியும். பெஞ்சில் உட்கார வேண்டும் என வாதிட்டார்.
இதனால், உதயநிதி வெளியே வந்து அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தார்.