சென்னை: முதலமைச்சரை ஒருமையில் பேசுவது நாகரீகமல்ல என்று முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. நெற்குன்றம் பகுதியில் இன்று நடைபெறும் முகாம் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்த திட்டத்தில் 15 துறைகள் இணைந்து மக்களுக்கான சேவை கிடைப்பதில் முகாம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 43 சேவைகளை மக்கள் பெற முடியும்.
மனுக்கள் பெறப்பட்டு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் கூடுதலாக வருகிறது. இதற்கு தன்னார்வலர்கள் கூடுதலாக பணியில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர் என செயல்படுத்தி இருந்தனர். ஆனால் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரை ஒருமையில் விமர்சிப்பது சரியான நாகரீகம் அல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் நன்றாக இருக்கிறது. மு.க.முத்து இறப்பின் நேரத்தில் முதல்வர் கூடுதலாக நேரத்தை செலவிட்டு இருந்தார். அதனால் சோர்வு ஏற்பட்டது. பயப்படும் அளவுக்கு ஒன்னும் சிக்கல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.