புதுடெல்லி: உண்மையான இந்தியர் இப்படி பேச மாட்டார் என்று ராகுல்காந்தி கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
இந்த நடைபயணத்தின்போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி, எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி விட்டனர் என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
அதோடு ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கங்களிலும் இந்திய எல்லையில் சுமார் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது என்ற கருத்தை வெளியிட்டார். இது அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் உடனடியாக மறுத்தது. என்றாலும் ராகுல்காந்தி தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
இதை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சங்கர் ஸ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். அதில், “ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் மனு செய்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் திபன்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்திய ராணுவத்தை ஒருவர் அவதூறாக பேசுவதை எப்படி நியாயப்படுத்த முடியும். அதுவும் அரசியலில் மிகப்பெரிய பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற ஒருவர் இந்திய எல்லை ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்படையான கருத்துக்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது.
இந்திய எல்லையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். சீனா அப்படி ஆக்கிரமித்து இருக்கிறது என்பது ராகுல் காந்திக்கு எப்படி தெரியும். எந்த தகவலின் அடிப்படையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு உண்மையான இந்தியன் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார். அதுவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் இப்படி பேசவேக் கூடாது.
எதிர்க்கட்சி தலைவர் சமூக வலைதளத்தில் மட்டும்தான் இப்படி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தனது கருத்தை ஏன் அவர் பாராளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டியது தானே? பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
மேலும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். அதோடு எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.