டெல்லி: மார்ச் 2024-ல் அதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கப்படுவதற்கு முன்பு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் நிலுவையில் உள்ளதால், அவற்றை விசாரிக்காமல் முடிவு எடுக்கக் கூடாது, விசாரித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முழு வழக்கையும் விசாரித்த நீதிபதி, புதிய மனுவைப் பெற்று உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். புகழேந்தியால் தேர்தல் ஆணையத்திடமும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்னர், மூன்று முறை நினைவூட்டி கடிதம் அனுப்பியும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. இதையடுத்து, தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஜனேஷ் குமார், சுபீர் சிங் சந்து ஆகியோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகழேந்தி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி மனோஜ் ஜெயின் உத்தரவிட்டார்.