சென்னை: என்னை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்கும் முயற்சிதான் இந்த விசாரணை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் வழக்கு மூலம் முடக்கி விடலாம் என நினைப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். நேற்று நடந்த காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த முறை கேட்ட கேள்விகளையே என்னிடம் காவல்துறையினர் மீண்டும் கேட்டனர். வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமானிடம் நடைபெற்ற விசாரணை நேற்று இரவு 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கிய விசாரணை இரவு 11.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.