சென்னை: மூடப்படாத பள்ளத்தால் ஆபத்து… சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் குடிநீருக்காக நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் திறந்தே கிடப்பதால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆழ்வார் திருநகர், சரஸ்வதி நகர் 4-வது தெரு சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதன் பின்னர் இணைப்புக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ஆனால் சரியான முறையில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் செல்லாத காரணத்தால் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 6 அடி ஆழமுள்ள இந்த பள்ளத்தை தோண்டி சில நாட்கள் வேலை செய்தனர். இதன் பிறகு இந்த பள்ளத்தை அப்படியே போட்டுவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
இதன் காரணமாக அங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் செல்லும் அளவுக்கே அந்த சாலையில் தற்போது இடம் உள்ளது. சிறுவர், சிறுமிகளும் சைக்கிளில் வெளியில் செல்கிறார்கள்.
அவர்கள் பல நேரங்களில் பள்ளத்தையொட்டி குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் சிக்கி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டும் பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆளை விழுங்கும் அளவுக்கு உள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமலேயே உள்ளது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். கேபிள் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் விபத்துகளையும் ஏற்படுத்தி வருகின்றன. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.