தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரில் பள்ளிக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் சில குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அந்த வகையில் தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டி சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டியில் அமைந்துள்ளது சரஸ்வதி நகர். இங்கு பள்ளி கூடம் அமைப்பதற்காக அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சில குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதே போல் இப்பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது தனியார் இடத்தில் இயங்கி வருகிறது. உடனடியாக புதிய கட்டிடம் பணிகளை தொடங்குமாறு அறிவுருத்த வேண்டுமாறும் பள்ளிக் கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு மக்கள் பொது பயன்பாட்டு கட்டிடம் அமைக்கலாம்.
எனவே பள்ளிக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.