ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் மாணவர்களிடம் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த தான முகாம்
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
இந்த முகாமில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘மேரா யுவ பாரத்’ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மாணவர்களிடம் தனிப்பட்ட படிவம் வழங்கியதாக கூறப்படுகிறது.
சாதி விவரம் கேட்டதாக புகார்
அந்தப் படிவத்தில் பெயர், வயது, படிப்பு, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் சாதி தொடர்பான தகவலும் கேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சில மாணவர்கள் சாதி விவரங்களை வழங்க மறுத்ததுடன், ரத்த தானம் செய்யாமல் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
ரத்த தானத்துக்கும் சாதி விவரத்துக்கும் என்ன தொடர்பு என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
கல்லூரி நிர்வாகம் விளக்கம்
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த விளக்கத்தில், கல்லூரி தரப்பில் எந்தப் படிவமும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
‘மேரா யுவ பாரத்’ அமைப்பைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மாணவர்களிடம் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவங்களை வழங்கி விவரங்களை பெற்றதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
