கோவை: ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காக பல ஆண்டுகளாக வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்கு மீண்டும் தடையின்றி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். விலை உயர்ந்து வரும் காலத்திலும் இட்லியின் விலையை மாற்றாமல் தொடர்வதால், ஏழை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இவரது கடை முக்கிய உணவிடமாக இருந்து வருகிறது.

இவருக்கு தனியார் நிறுவனம் சார்பில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சிலிண்டர் கிடைக்காததால், இட்லி சுடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கமலாத்தாள் பாட்டி விறகுகளை சேகரித்து, சிறிய விறகு அடுப்பில் இட்லி சுடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அடுப்பின் வெப்பம் மற்றும் புகைக்கு மத்தியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், ஒரு ரூபாய் இட்லி விற்பனையை அவர் நிறுத்தவில்லை.
“காசு இருக்கிறவர்கள் வேறு கடைக்குச் சென்று சாப்பிடலாம். காசு இல்லாத ஏழைகள் எப்படி சாப்பிடுவார்கள்?” என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
தொடர்ந்து, இலவச சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமலாத்தாள் பாட்டி கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் மனு அளித்தார். இதையடுத்து இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது.
கமலாத்தாள் பாட்டியின் சேவை தொடர்பான தகவல்கள் பரவிய நிலையில், அவருக்கு தடையின்றி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஒரு ரூபாய் என்ற குறைந்த விலையில் உணவு வழங்கி வரும் கமலாத்தாளின் சேவை, உணவு விற்பனையைத் தாண்டி மனிதநேயத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. வயது முதிர்ந்த நிலையிலும் ஏழைகளுக்காக இட்லி சுடுவதை அவர் தொடர்ந்து வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
