தஞ்சாவூர்: ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக 13 கோடி வாக்காளர்களை நீக்கி வாக்குரிமையைப் பறித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் மாவட்டச் செயலாளர் கே.மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் பேசுகையில்,
“தேர்தல் ஆணையம் என்பது தனிநபர் அதிகார மையம் அல்ல; அது அரசியல் சாசனம் வழங்கிய கூட்டுப் பொறுப்புடைய அமைப்பு. ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சக தேர்தல் ஆணையர்களைக் கூட கலந்தாலோசிக்காமல், ஒன்றிய பாஜக அரசுக்கு விசுவாசமாக தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறார்.
எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் 13 கோடி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அவர்களின் அடிப்படை வாக்குரிமையைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலைக்கு ஒப்பானது. இதன் மூலம் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்க துணை போயுள்ளார்.
எனவே, அரசியல் சாசனத்திற்கு எதிராக, சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், கோ.நீலமேகம், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சரவணன், கே.அபிமன்னன், எஸ்.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, பி.எம்.இளங்கோவன்.
இ.வசந்தி, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கோவிந்தராசு (தஞ்சை), சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு), ஏ.ராஜா (திருவையாறு), எஸ்.கோவிந்தராஜ் (ஒரத்தநாடு), அரங்கத் தோழர்கள் ஆர்.புண்ணியமூர்த்தி, செங்குட்டுவன், ராமசாமி, மாநகரக்குழு உறுப்பினர்கள் ராஜன், மணிமாறன், எஸ்.கோதண்டபாணி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்டத் தலைவர் வெ.சேவையா, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துக்குமார், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் நகரச் செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன், நிர்வாகிகள் பிரபு, மதியழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
