சென்னை:வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணிபுரியும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் மற்றும் பிற பணியாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளும் போராட்டத்தின் பின்னணியில் உள்ளன.
வங்கி சேவைகளில் பாதிப்பு
செப்டம்பர் 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம் நடைபெறுவதால் குறிப்பாக வங்கிக் கிளைகளில் நேரடி சேவைகள் பாதிக்கப்படலாம். காசோலை பரிவர்த்தனை, பணப் பரிமாற்றம் உள்ளிட்ட சில பணிகளிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. டிஜிட்டல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நீண்ட இடையூறை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்
இதற்கிடையே, வங்கி வேலைநிறுத்தத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க கருவூலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களுக்கான மின்னணு தீர்வு செப்டம்பர் 25-ம் தேதியே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பளப் பட்டியல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்கூட்டியே கருவூலங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கி வேலைநிறுத்த காலத்திலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
