கோவை: கோவையில் குட்கா கடத்தல் கும்பலை பிடிக்க, அதிவேகமாக சென்ற காரின் கூரை கம்பிகளைப் பிடித்தபடி சுமார் 40 கி.மீ. பயணம் செய்த தலைமைக்காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
கோவில்பாளையம் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக பதிவு எண் கொண்ட வெள்ளை நிற எஸ்யூவி ஒன்று சந்தேகத்திற்கிடமாக வந்தது. போலீசார் வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அதில் இருந்தவர்கள் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாகனத்தின் ஜன்னல் அருகே விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், கார் திடீரென வேகமெடுத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்நிலை தலைமைக்காவலர் வேல்முருகன் காரின் கூரை கம்பியைப் பிடித்தபடி மேலே ஏறினார்.
கார் கோவை நகரப் பகுதிகளை கடந்து அவினாசி-திருப்பூர் நோக்கி சென்றது. சில நேரங்களில் 100 கி.மீ. வேகத்துக்கும் மேல் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 40 கி.மீ. தூரம் வேல்முருகன் காரின் கூரையில் பிடித்தபடி இருந்தார். அவரின் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸும் பின்னால் சென்றது.
இறுதியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே போலீசார் வாகனத்தை மடக்கினர். காரில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனத்தில் 250 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேல்முருகனின் துணிச்சலை பாராட்டி முதலமைச்சர் விஜய் அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளும் அவரைப் பாராட்டியுள்ளனர்.
