பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சுங்குவார்சத்திரம் போலீசார் அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னைக்கு வெளியே அமைக்கப்படும் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் விமான நிலையம். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு 12 கிராமங்களில் சுமார் ஐயாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டம் உள்ளது.
இந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணைகள் மற்றும் திட்ட அனுமதிகள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 600 நாட்களாக ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை கைவிடாவிட்டால் தமிழகத்தை விட்டு ஆந்திரா மாநிலத்தில் தஞ்சம் அடைய நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.