திருப்பாதிரிப்புலியூர்: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு… மத நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் தர்மசாலைக்கு தைப்பூசத்தையொட்டி 15 டன் காய்கறிகள் மற்றும் 100 மூட்டை அரிசியை இஸ்லாமியர் ஒருவர் வழங்கியுள்ளார்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாக வாழ்ந்த வள்ளலார், பசித்திரு தனித்திரு விழித்திரு என்ற கொள்கையின்படி இருந்தவர்.அவர் வடலூரில் அமைத்த சத்திய ஞான சபை தர்ம சாலையில், 3 வேளையும் பல்லாயிரக்கணக்கானோர் உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடைபெறுவதை ஒட்டி, திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்னும் இஸ்லாமியர், தர்மசாலைக்கு 15 டன் காய்கறிகள் மற்றும் 100 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். அவற்றுடன், 5 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும், சரக்கு வாகனம் மூலம் தர்மசாலைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், வடலூர் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு கடந்த 21 ஆண்டுகளாக காய்கறி,அரிசி மூட்டைகள் அனுப்பி வருவதாகவும், மதநல்லிணக்கம்,சமூக ஒற்றுமை,வாடிய கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கொள்கையையொட்டி வருடாவருடம் இந்த பொருட்களை அனுப்பி வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது வணிகர் சங்க பேரமைப்பின் கடலூர் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியரான பக்கிரான், மதங்களை கடந்து உணவுப் பொருட்களை வழங்கியது கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.