சென்னை: ஒரு வாரத்திற்கு இருக்கு கனமழை… ”தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது,” என, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தெற்கு வங்கக்கடலின் மைய பகுதியில், நாளை புதிதாக வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு சுழற்சிகள், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம். இது, வடகிழக்கு பருவமழையின் துவக்கமாகவும் இருக்கலாம்.
வடமேற்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவக்காற்று விலகி வருகிறது. பிற மாநிலங்களிலும், தென்மேற்கு பருவக்காற்று விலகி, கிழக்கு திசை காற்று வீசும்போது, வடகிழக்கு பருவமழை துவங்கும்.
அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வய்யப்புள்ளது. அக்., 13, 14ல் உள் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
இன்று திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல் நாளை திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கையில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.