சென்னை: புதிதாக 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் டாக்டர் பற்றாக்குறை என புரிதல் இல்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“அரசு மருத்துவமனைகளில் புதிதாக உருவாகும் காலி பணியிடங்களை சேர்த்து 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருக்கும் இடங்களில், சில சமயங்களில் டாக்டர் இல்லையென்றால், டாக்டர் பற்றாக்குறை உள்ளதாக புரிதல் இல்லாமல் வதந்தி பரப்புகிறார்கள்.
கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் ஒரு டாக்டர்தான் இருப்பார். சில நேரங்களில் டாக்டர் பணியில் இல்லாவிட்டால், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம், அல்லது டாக்டரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.