கரூர்: தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல்… கரூரில் பைக் ஆக்சிலேட்டரை முறுக்கி சப்தம் எழுப்பிய இளைஞர்களை தட்டிக்கேட்டவர்களை சுற்றிவளைத்து தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் காணியாளம்பட்டியிலுள்ள பேக்கரி ஒன்றில் பாப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் பைக்கின் ஆக்சிலேட்டரை முறுக்கி, அதீத சப்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதுகுறித்து பாப்பனம்பட்டி இளைஞர்கள் கேள்வி எழுப்பவே, அது இருதரப்பு தகராறாக மாறியது. அதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்களும், போன் செய்து தங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்களை பேக்கரிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது வேப்பங்குடியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு வந்து 5 இளைஞர்களையும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போலீசார் அங்கு சென்று சமாதானம் செய்ய முயன்றபோது, அவர்கள் முன்னிலைலேயே இருவரும் தாக்கிக் கொண்டதால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கும் நிலை ஏற்பட்டது. மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.