சென்னை: ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமலே கணவன்-மனைவியாக பெயரளவுக்கு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்மிடையே உண்டு. பார்த்தால் சண்டை வந்துவிடும் என்று கருதி கணவர் ஒரு ஷிப்டும், மனைவி இன்னொரு ஷிப்டுமாக வேலைக்கு சென்று ஒருவர் வீட்டில் தூங்கி எழும்போது, இன்னொருவர் தூங்குவதற்கு வீட்டிற்கு வந்த நிகழ்வுகளும் உண்டு. இப்படி மோதிக் கொள்ளும் தம்பதிகள் சண்டையின்றி வாழ, தரப்படுகின்ற ஆலோசனை இது!
திருமண வாழ்க்கையைச் சிதைக்கும் விஷயங்களில் சந்தேகம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கணவன், மனைவியை சந்தேகப்படுவது இதிகாச காலம் தொட்டே இருந்து வருகிறது. அது அவர்கள் பிறவி குணம். மனைவி, கணவரை சந்தேகப்படுவதும் சிலர் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
சந்தேகத்திற்குரிய விஷயம் எதுவானாலும் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. அப்படியே ஒருவேளை சந்தேகப்பட்டது உண்மை என்றாலும், தவறு நடந்த அந்த சம்பவத்தை மறந்து மீதி காலத்தை இனிமையாக்க முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம்.
சில சந்தர்ப்ப சூழல்கள் தம்பதிகளிடையே இருக்கும் நம்பிக்கையைச் சிதறடித்துவிடும். அந்த நேரத்தில் உறுதியாக இருக்க வேண்டும். உண்மையான அன்பு, நம்பிக்கையின் அடித்தளத்தில் உருவாகிறது. அன்பை காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள் என்பதை நம்ப வேண்டும். கணவன்- மனைவியை பிரிக்க நினைக்கும் சக்திகள் முதலில் பிரயோகிப்பது நம்பிக்கைக் குறைவு எனும் அஸ்திரத்தைதான். எதேச்சையாக சில தவறுகள் நடக்கலாம். ஆனால் அதுவே எதிர்காலத்தைச் சிதைக்கும் விதமாக இருந்துவிடக்கூடாது.
அவரவர் குடும்பத்தைப் பற்றிய பெருமை ஒவ்வொருவருக்கும் உண்டு. இதுவே அடுத்தவரை குறைசொல்லும் விதமாக அமைந்துவிடக் கூடாது. இதனால் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை ஒருவரை நிம்மதியாக வாழவிடாது.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்கூட அதை பெரிதுபடுத்திப் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வளவு உயர்ந்த நான் உன்மேல் இருந்த அன்பால் ஏற்றத்தாழ்வு பாராமல் உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னால் அது உண்மையான அன்பாக இருக்காது. அதனால் மனைவியிடம் எழும் மனக்குறை ஏதேனும் ஒரு விதத்தில் வாழ்க்கையை பாதிக்கும்.
கணவன்- மனைவி இருவரிடமும் அவசியம் இருக்க வேண்டியது, நேர்மை. திருமணத்துக்கு முன் இருந்த வாழ்க்கை வேறு. அந்த வாழ்க்கை, அன்றைய தவறுகள் எந்த காரணத்தைக் கொண்டும் நிகழ்காலத்தைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.