சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வர் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 15) தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 2022 செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்தனர்.
இத்திட்டத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023 ஆக., 25ல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளை முதல்வரால், கூடுதல் பள்ளிகளில், இத்திட்டம் துவக்கப்பட்டது. இதன் மூலம் 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் சூடாகவும் சுவையாகவும் காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீசேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்தநாளான நாளை (ஜூலை 15) முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் உலக அளவில் முதன்மையானது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.