கோவை: கோவை மாநகராட்சி மேயராக பணியாற்றி வந்த 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார், கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்ய நாளை (ஆகஸ்ட் 6) மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் எம்.சிவகுரு பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய மேயர் யார் என கவுன்சிலர்களிடம் கேட்டனர். மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன. 100 வார்டுகளைக் கொண்ட கோவையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
அதனால் மேயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருந்தது. இதனிடையே கவுன்சிலர்களில் ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது இதில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு உடனிருந்தார். மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அதன் முடிவில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், அவர் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்படும்.