சென்னை: கடந்த 2014-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் அருண் என்ற 20 வயது இளைஞர் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை எறிந்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, இக்கொலை தொடர்பாக விஜயகுமார் என்ற 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி அப்போதைய கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் (தற்போது உதவி ஆணையர், ஆவடி காவல் ஆணையரகம்). இந்த வழக்கு விசாரணை சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தி, சாட்சிகளை முன்வைத்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்து, கனகராஜ் சிறப்பாக செயல்பட்டார். இதையடுத்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்தது. கடந்த 2017-ம் ஆண்டு சென்னை விருகம்பாக்கம் கங்கை தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் (25) என்பவரை சிலர் கொலை செய்தனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்தார்.
அப்போதைய விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்கள் சுப்ரமணி (ஓய்வு) மற்றும் சீனிவாசன் (தற்போது சைதாப்பேட்டை ரேஞ்ச் உதவி ஆணையர்) ஆகியோர் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளாக இருந்தனர். சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், சாட்சிகள் மீது தனி கவனம் செலுத்தி, அவர்களை ஆஜர்படுத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற விசாரணையை முடித்துக் கொண்ட நீதிமன்றம், ரத்தினராஜ், முரளி, ரஞ்சித்குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.
காவல் ஆணையர் நேற்று நேரில் உதவி ஆணையர்கள் கனகராஜ், சீனிவாசன், ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் சுப்ரமணி ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டி, அவர்களின் சிறப்பான விசாரணை, ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கொலைக் குற்றவாளிகள் மீது வெற்றிகரமாக வழக்குத் தொடர்ந்ததற்காகப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.