சென்னை: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இதில், நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
இதற்கிடையே, ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யுங்கள் என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்கவும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.