சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புது துணி, பட்டாசு, இனிப்புகள்தான் நினைவுக்கு வரும். அந்தவகையில் இன்று புத்தாடை வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
சென்னையில் இன்று காலையில் இருந்து மேகக்கூட்டங்களுடன் மழை விட்டு விட்டு பெய்தபடியே காணப்பட்டது. கொட்டும் மழையிலும் ஜவுளிக்கடைகளை நோக்கி மக்கள் சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.
தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சவுகார்பேட்டை உள்ளிட்ட சென்னையில் முக்கிய கடைத்தெருக்களில் மழையில் குடைப்பிடித்தபடி சென்று தீபாவளி ‘ஷாப்பிங்’ செய்து வருகின்றனர். தியாகராயநகரில் எங்கு திரும்பினாலும், ஏதோ குடைகள் நகர்ந்து செல்வது போன்ற காட்சியே இன்று காலையில் அரங்கேறியது.
கடைசிநேர விற்பனை என்பதற்காக இருக்கும் துணிகளை மட்டுமே காட்சிப்படுத்தாமல், ஏற்கனவே எப்படி விற்பனைக்காக துணிகளை காட்சிப்படுத்தி இருந்தார்களோ, அதேபோல் ஜவுளி கடைக்காரர்கள் துணி வகைகளை அடுக்கி வைத்திருந்தனர். மக்கள் தங்களுக்கு பிடித்த டிசைன், கலரில் துணிகளை தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
ஜவுளிக்கடைகளை தொடர்ந்து, இனிப்பு, காரம் விற்பனை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள், அதனை கடைகளில் கேட்டு ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
பலர் அந்த நேரத்தில் என்ன புதுவகையான இனிப்புகள் கடைகளில் விற்பனைக்காக இருந்ததோ, அதனை கேட்டு வாங்குகின்றனர். அதிலும் நெய் ஸ்வீட்ஸ், காஜூ கட்லி உள்ளிட்ட சில இனிப்பு வகைகளின் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது. சில பெரிய கடைகளில் புது ஆர்டர்கள் எடுக்க கடைக்காரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பெரிய ஆர்டர் என்றாலும், இப்போது எங்களால் அதை செய்து கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு படு பிசியாக விற்பனை நடந்து வருகிறது. இனிப்பு மட்டுமல்லாது, கார வகைகளிலும் புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்திருந்ததையும், அதனை கேட்டு வாங்கிச் சென்றதையும் பல இடங்களில் பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் விற்பனையில் சற்று சுணக்கம் இருந்தாலும், கடந்த சில நாட்களாக விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பண்டிகைக்கு இன்று ஒருநாள் இடைவெளி இருப்பதால், விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றே வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.