சென்னை: ஜனநாயகன்’ பட சென்சார் விவகாரத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்ன தெரியுங்களா?
தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதமானதால், ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்காமல் தனிநீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் எனக் கூறி, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவை ரத்து செய்தது.
இதனால், திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாகாத நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதேசமயம் தணிக்கை வாரியம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் வழக்கில் தங்களின் வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜனநாயகன் பட மேல்முறையீட்டு வழக்கை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்விலேயே வாதத்தை முன்வைக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜன நாயகன் தொடர்பான வழக்கை 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.